Thursday 9th of May 2024 08:33:14 PM GMT

LANGUAGE - TAMIL
.
மாகாணசபைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை கோட்டா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! - செ.கஜேந்திரன்!

மாகாணசபைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை கோட்டா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! - செ.கஜேந்திரன்!


"மாகாண சபையினூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களினூடாக முன்னெடுக்க இணைக்கும் வேலைத்திட்டத்தை கோட்டாபய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அரசு மாகாண சபைகளைப் பலவீனப்படுத்துகின்றது."

- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் நேற்று குற்றஞ்சாட்டினார் .

அவர் மேலும் கூறுகையில்,

"போரால் அழிந்துபோன பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்தவித நிதி ஒதுக்கீடுகளையும் அரசு செய்யவில்லை. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பெருமளவான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வடக்கில் மட்டும் 60 ஆயிரம் விதவைக் குடும்பங்கள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் இல்லை. வடக்கில் 'சி அன்ட் டி' தர வீதிகள் 840 கிலோ மீற்றர் நீளமானவை திருத்தப்பட வேண்டியுள்ளது.

அதேபோன்று 8567 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளது. அத்துடன் பல கைத்தொழிற்சாலைகளை புனரமைக்க வேண்டியுள்ளது. ஆனால், எதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.

'யானைப்பசிக்கு சோளப்பொரி' போல் சிறிதளவு நிதியை ஒதுக்குவதனால் எதனையும் கட்டியெழுப்ப முடியாது. மாகாண சபைகளை உருவாக்கிவிட்டு அதற்கான அமைச்சுகளை அமைத்துவிட்டு மாகாண சபை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களை வைத்துக்கொண்டு செய்யும் வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுக்கின்றது. இவ்வாறான வேலைத்திட்டம் மூலம் அரசு மாகாண சபைகளை திட்டமிட்ட முறையில் வினைத்திறனற்றவையாக்குகின்றது. எனவே, இந்த வேலைத்திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட்டு மாகாண சபைகள் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசு தன்வசப்படுத்த பார்க்கின்றது. இது மாகாண சபைக்குரியது. எனவே, இவ்வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் திட்டத்தைக் கைவிட்டு அதனை உடனடியாக அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE